Breaking News
recent

சென்னை மண்ணடியின் அடையாளமும் நிறமும்! சாளை பஷீர்

மண்ணடியின் சுவை: 
சென்னை மண்ணடியின் அடையாளமும் 
நிறமும்





1) நாகர்கோவில் ஈத்தாமொழியைச் சேர்ந்த சுயம்புலிங்கம் அண்ணாச்சி :
மண்ணடி தெருவும் முத்துமாரி செட்டித்தெருவும் முட்டிக்கலக்கும் முக்கில் மாலை 6 -இரவு 10:00 மணி வரை மழையானாலும் வெயிலானாலும் கதலி , நாடு , பச்சை நாடு , செவ்வாழை , நேந்திரன் , பூளாச்செண்டு , ரஸ்தாளி என விதம் விதமான வாழைப்பழங்களை விற்கின்றார்.

பெட்டிக்கடைகளில் 10 ரூபாய்களுக்கு இரண்டு , சில சமயங்களில் ஒரு ரஸ்தாளி பழம் மட்டுமே தருவார்கள். ஆனால் இவரோ பத்து ரூபாய்களுக்கு நடுத்தர பருமனுள்ள ரஸ்தாளிபழம் மூன்று அல்லது நான்கு தருவார்.
எனக்கு தெரிந்த வகையில் சென்னையின் சாலைகளில் காணப்படும் எந்தவொரு தட்டுக்கடைகள் , பெட்டிக்கடைகளை விடவும் மலிவாக இவர் பழம் விற்கின்றார்.

2) கேரளத்தைச் சேர்ந்தவரால் நடத்தப்படும் பார்வதி காபி பார்:
வெங்கடேசமுதலி தெருவின் எதிர்புறமாக மண்ணடி தெருவில் அமைந்துள்ளது.
இந்த கடையில் காஃபி , ராகிமால்ட் , ஹார்லிக்ஸ் பால் , சீனி பால் என விற்றாலும் இங்குள்ள தனிச்சுவை ரகம் என்பது “ஏல அரிசியுடன் இளம் பழுப்பு நிறத்தில் இருக்கும் பனங்கற்கண்டு பால் தான் . சிறிய குவளை 10 ரூபாய்கள் , பெரிய குவளை 17 ரூபாய்கள் , பால் பொட்டலம் பதினைந்து ரூபாய்கள்.
மண்ணடி தெருவில் பனங்கற்கண்டு பால் விற்கும் ஒரே கடை இது.இரவு உணவுக்கு இறுதி முத்திரை இந்த பனங்கற்கண்டு பால்தான்.



3) இந்தியன் டீ , காபி
ராமனாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்தவர்கள்.
இஞ்சி தேநீருக்கும் , பிளாக் டீ , பிளைன் டீ , கட்டஞ்சாயா , சுலைமானிய்யா என வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும் பால் கலக்காத வெறுந்தேயிலைக்கும் இவர்கள்தான் அரசன்.
சுழற்சி முறையில் பணியாற்றும் சேது சீமையின் கறுத்த பணியாளர்களுடன் பின்னிரவு 02:30 மணியிலிருந்து இரவு 11 மணி வரை திறந்திருக்கும் கடை. கடைசியாக தூங்கி முதலில் கண் விழிக்கும் மண்ணடி மனிதர்கள்.
அதிகாலையில் கிடைக்கும் இனிப்பு போண்டா , வெங்காய கார போண்டா. காலையில் கிடைக்கும் பணியாரம் , உளுந்து வடை , சமூசா. மாலையில் கிடைக்கும் வாழை பஜ்ஜி , முட்டை போண்டா போன்றவை தேனீருக்கான துணை உணவு.
அதிகாலையில் சிவந்த நிறத்தில் சூடாக கிடைக்கும் இனிப்பு போண்டாவை பிய்த்து வாயில் போடும்போது அதன் உள் மாவு மெல்லிய சூட்டில் இளகிய பதத்தில் கரைந்து போகும். இதற்காகவே நீங்கள் மண்ணடி வந்து போகலாம்.


இவர்கள் இல்லாத மண்ணடி வாசம் என்பது என்னைப்பொருத்தவரை வட்டச் சுழியம்தான்.
சாளை பஷீர் 
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.